ஆகஸ்ட் 7: உலகின் தலைசிறந்த டெஸ்ட், கிரேக் சேப்பல் பிறந்தநாள்!

ESPNcricinfo staff

பிரெட் லீ உடன் ஃபிளிண்டாப் © Getty Images

உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவரான கிரேக் சேப்பலின் பிறந்த நாள் இன்று. 1970களிலும் 80களிலும் ஆஸ்திரேலிய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடியவர் கிரேக் சேப்பல். ஆன் டிரைவ் விளையாடுவதில் வல்லவரான கிரேக் சேப்பல் 87 டெஸ்டுகளில் விளையாடி 53.86 சராசரியில் 7,110 ரன்கள் குவித்தார். டெஸ்டில் அவர் எடுத்த 24 சதங்களில் 4 இரட்டைச் சதங்களும் அடக்கம்.

74 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள கிரேக் சேப்பல் 3 சதங்கள் உடன் 2331 ரன்கள் எடுத்தார். சராசரி 40.19. ஒருநாள் ஆட்டங்களில் 9 முறை ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டவர். நளினமாக பேட்டிங்கிற்குச் சொந்தக்காரரான கிரேக் சேப்பல், சமயங்களில் பொறுப்பில்லாமல் விளையாடுகிறார் என்று விமர்சிக்கப்பட்டவர். இயான் சேப்பல் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமையேற்றார். கேப்டனாக தனது அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்தார்.

கிரேக் சேப்பல் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 48 டெஸ்டுகளில் 21-ல் வெற்றி பெற்றது. கேப்டனாக அதிக பேட்டிங் சராசரி கொண்ட பேட்டர்கள் வரிசையில் கிரேக் சேப்பல் இரண்டாவது இடத்தில் உள்ளார். பேட்டிங் மட்டுமல்லாமல் மித வேகப்பந்து வீச்சிலும் ஆஸ்திரேலிய அணிக்குப் பங்களித்தவர் கிரேக் சேப்பல். டெஸ்டில் 47 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். தலைசிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவரான கிரேக் சேப்பல் 122 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

ஓர் அரசருக்கே உரிய ராஜகலையுடன் பேட்டிங் செய்பவர் கிரேக் சேப்பல் என்று கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் ரோபக் வர்ணித்தார். அறிமுக டெஸ்டிலும் கடைசி டெஸ்டிலும் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய பேட்டர் கிரேக் சேப்பல். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 7,000 ரன்களைக் குவித்தவரும் அவர்தான். இங்கிலாந்தைத் தவிர மற்ற எல்லா டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு எதிராகவும் 48-க்கு மேல் சராசரி வைத்துள்ளார் கிரேக் சேப்பல். நான்காவது வீரராகக் களமிறங்கி அதிக சராசரி வைத்துள்ள பேட்டர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.

கிரேக் சேப்பல் விளையாடிய 87 டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி 38-ல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற டெஸ்டுகளில் 70.49 சராசரியில் 14 சதங்கள் குவித்தார். கெர்ரி பேக்கரின் வேர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

உலகின் தலைசிறந்த பேட்டிங் தியரிஸ்ட் என்று கிரேக் சேப்பலுக்குப் புகழாரம் சூட்டினார் மார்ட்டின் குரோவ்.1981-ல் மெல்பர்னில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்துக்குக் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது தனது சகோதரர் ட்ரெவர் சேப்பலை அண்டர்ஆர்ம் (Underarm) பாணியில் பந்து வீசச் செய்து சர்ச்சையில் சிக்கினார் கிரேக் சேப்பல். தலைசிறந்த பேட்டர் என்று புகழப்பட்ட கிரேக் சேப்பல் பயிற்சியாளராக எதிர்பார்த்த அளவுக்கு சாதனைகள் செய்யவில்லை.

கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் சூறாவளி வீசியது. கங்குலியுடனான மோதல் காரணமாக செய்திகளில் அடிக்கடி இடம்பெற்றார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்றி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத பயிற்சியாளராக அவர் உள்ளார்.

கிரேக் சேப்பல் Adrian Murrell / © Getty Images

உலகின் தலைசிறந்த டெஸ்ட்!

2005-ல் இதே நாளில் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் உலகின் தலைசிறந்த டெஸ்ட் விளையாடப்பட்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் குவித்தது. இதன் பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 182 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஷேன் வார்ன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில் 177 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி நாளில் 107 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷேன் வார்ன் - பிரெட் லீ இணை அதிரடியாக ரன் குவித்தது. வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஃபிளிண்டாப் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் ஆனார் வார்ன். கடைசி விக்கெட்டுக்கு 62 ரன்கள் தேவை.

10-வது விக்கெட்டுக்கு பிரெட் லீ - காஸ்பிரோவிச் இணை யாரும் எதிர்பார்க்காத வகையில் விளையாடி 58 ரன்கள் சேர்த்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த டெயில்-எண்ட் கூட்டணி என்று வர்ணிக்கப்படுகிறது. வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற பரபரப்பான சூழலில் ஹார்மிசன் வீசிய பவுன்சர் காஸ்பிரோவிச் கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் ஜோன்ஸிடம் கேட்ச் ஆனது. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் இங்கிலாந்து அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

அப்போது ஆட்டத்தில் ஒரு மகத்துவமான தருணம் நடந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு சோகமே உருவாக வீற்றிருந்த பிரெட் லீ இடம் சென்று ஆறுதல் சொன்னார் ஃபிளிண்டாப். கிரிக்கெட் உலகமே ஃபிளிண்டாபின் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தது. இந்த டெஸ்டும் இந்தப் புகைப்படமும் அழியாப் புகழ் கொண்டவை.

Comments